#002: பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர்! – 15 ஜுலை 1984

காமிக்ஸ் அன்பர்கள் சமூகத்திற்கு வணக்கம். சென்ற பதிவாக வெளிவந்த ராணி காமிக்ஸ் முதல் இதழ் நினைவுகூறல் நண்பர்களிடையே சரியான வரவேற்பை பெற்றதில் மிக மகிழ்ச்சி. வழக்கம் போல உங்கள் கருத்துகளுக்கு என் பதிலை அங்கு படிக்கலாம். ஏற்கனவே தாமதமாக தயாராகிய இரண்டாம் இதழ் விருந்து, கெட்டு போகும் முன் சுவைத்து விடலாம்.
சுட்டெரிக்கும் வெயில் இந்திய நகரங்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் தருணத்தில், சூரியனின் வெப்ப பார்வையில் தகிக்கும் பாலைவனத்தை மையமாக கொண்டு வெளிவந்த இந்த கவ்பாய்* சித்திரகதையை நினைவுகூர்வது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். (சரி சரி, ஏற்கனவே தாமத பதிவு அதற்கு சப்பை கட்டு வேறயா என்று கூறுவது கேட்கிறது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா)
* Cowboy என்ற சொல்லுக்கு “மாட்டு பையன்” என்று கூறலாம் என்றாலும், அவ்வார்த்தைக்கு நம் நடைமுறையில் அர்த்தம் சரி வராது என்பதால் கவ்பாய் என்றே அழைப்போமே?
#2: பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர்!கவ்பாய் சாகஸம் - 15 ஜுலை 1984
அமெரிக்க வரலாற்றில் கவ்பாய் சாகச வீரர்களுக்கு ஒரு மிக பெரிய பங்கு உண்டு. பூர்வ குடிமக்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் இடங்களில் ஆக்ரமிப்பு செய்து, ஒரு அரசாங்கத்தை கட்டி காப்பாற்ற அவர்களுக்கு பக்க பலமாக இருந்தது, இந்த குதிரை ஓட்டிகள்தான்.
நாட்டை காப்பாற்ற போர்கள வீரர்கள் என்றால், சட்டத்தை நிலை நாட்ட அவர்கள் நம்பியது ஷெரீப், மார்ஷல் என்ற பதவிகளுக்கு அவர்கள் நியமித்த கவ்பாய் வீரர்களையே.
மார்ஷல் என்பவர் மாநிலங்களின் தலைவராக செயலாற்றும் போது, அவருக்கு உதவியாக பிராந்தியங்களின் காவல் தலைவராக ஷெரீப் செயல்படுவார்.
மக்களுடன் ஒன்றி அவர்களை சட்டத்திற்குப்பட்டு காரியம் ஆற்ற செய்வது அவர்களின் தலையாய கடமையாய் இருந்தது.

ஜேம்ஸ் பாண்ட் கதைகளை மட்டும் வைத்து காலம் ஓட்ட முடியாது என்று புரிந்து கொண்ட ராணி நிர்வாகம், தங்கள் முதன்மை கதாநாயகனின் சாகசங்களிடையே இடை சொருகலாக உபயோகபடுத்த தேர்ந்தெடுத்தவையே கவ்பாய் கதைகள்.

Rani 002 p01இப்படிபட்ட கதைகளத்தை கொண்டிருந்த அந்த கவ்பாய் காலகட்டத்தை ஒட்டி தீட்டபட்ட பல கதைகளிள் ஒன்றே, இந்த “பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்” என்ற ராணி காமிக்ஸின் இதழ். இனி கதையை அலசுவோம்.

சூரியனின் வெப்ப பார்வையில் குளித்து கொண்டு, கண்ணுக்கு எட்டும் தொலைவுமட்டும் மண் குன்றுகளும், கள்ளி செடிகளும் நிறைந்த ஒரு மொட்டை பாலைவனத்தில், இரு உருவங்கள் மெதுவாக தங்கள் குதிரையில் சவாரி செய்த படியே அறிமுகமாகின்றனர். அவர்களில் ஒருவர் பிராட் பிளின்ட். சில்வர் பெண்ட் என்ற பிராந்தியத்தின் ஷெரீப் பொறுப்பில் காரியம் ஆற்றி கொண்டிருப்பவர்.
Rani 002 p02அவருடன் சக பயணியாக-கைதியாக, பயணிக்கும் ஆசாமி, நிக் மன்றோ. கிட்டதட்ட 30க்கும் அதிகமான கொலைகளை செய்த படு பாதகன், 19 வயதே நிரம்பியவன் என்பது இன்னொரு கொடுமை. குற்றவாளி என்று பட்டம் கட்டபட்ட அவனை, சலிணா பால்ஸ் என்ற நகரத்தில் உள்ள மார்ஷல் ஆபிஸில் ஒப்படைக்கவே இந்த நெடிய பயணம்.
அந்த சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே கூட நிக்கின் முகத்தில் இருந்த வெறுப்பு சற்றும் குறையவில்லை. தன்னை காப்பாற்ற அவன் அண்ணன்கள் பார்ட்டும், கெப்பும் கட்டாயம் வருவார்கள் என்று ஷெரீப்பை மிரட்டி பார்க்கிறான்.
உன்னை விட பெரிய கொலையாளிகள் அவர்கள் கிடையாது, எனவே நீ அடக்கி வாசிக்கலாம் என்று ஷெரீப் கடுமையாக கூறி அவன் வாயை அடைப்பதின் மூலம் ஷெரீப் தன் ஆளுமைய நிரூபிக்கிறார்.
Rani 002 p04அடங்கி ஒடுங்கும் நிக், வெறு வழியின்றி வெறுப்புடன் அவரை தொடர்கிறான். சற்று தூரமே சென்றிருக்கையில், ஆள் அரவம் இல்லாத அந்த பிராந்தியத்தில் எதிரொலிக்கும் துப்பாக்கி சத்தம் அவர்கள் கவனத்தை திசை திருப்புகிறது.
Rani 002 p008மிகுந்த கவனத்துடன் ஒரு குன்றின் மீதிருந்து நோட்டம் விடும் ஷெரீப் கீழே பள்ளத்தாக்கில் செவ்விந்தியர்கள் ஒரு சாரட்டு வண்டியை சூரையாடி கொண்டிருக்கும் அக்கிரமத்தை காண்கிறார்.
நிக்கை ஒரு கற்றாலையுடன் பிணைத்து விட்டு, தன் உயிரினையும் பொருட்படுத்தாது, அந்த வெறி பிடித்த கும்பலின் நடுவே சீற்றத்துடன் புகுந்து, வண்டி காவலாளியுடன் கைகோர்த்து போராடுகிறார்.
எண்ணிக்கையில் அதிகமான செவ்விந்தியர்களிடம் வீழ்வது உறுதி என்று நினைத்து கொண்டிருக்கையில் ஆபத்பாந்தவன் போல வந்து சேருகிறார்கள் ரோந்து படை வீரர்கள். வீரர்களை கண்ட மாத்திரத்தில் செவ்விந்தியர்கள் சிதறி ஓடி போக, ஒரு வழியாக அந்த போராட்டம் நிறைவடைகிறது.
Rani 002 p009 வண்டியில் இருந்து வெளிவரும் வாரன் என்ற கணவான், அவரின் அழகு மனைவி லாரா (அது எப்படி கணவான்களுக்கெல்லாம் அழகிய மனைவிகளே கிடைக்கிறார்கள் என்ற ரகசியத்திற்கு யாராவது பதில் கூறினால் தகும்), சகிதம் ஷெரீப்பின் உதவிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறார், கூடவே அவர்களும் சலீனா பாக்ஸுக்கு தான் பிராயணம் செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
ஆனால், இனியும் இந்த பிராந்தியத்தில் வண்டி ஓட்ட போவதில்லை என்று கூறி வண்டியோட்டி விலகி கொள்கிறான்.
Rani 002 p013வாரனின் கெஞ்சலுக்கு பிறகு, வேறு வழியில்லாமல், ஏற்கனவே ஒரு கைதியுடன் பயனித்து கொண்டிருந்தாலும், இவர்களையும் துணை பயணிகளாக கொண்டு செல்ல ஒப்புக்கொள்கிறார் ஷெரீப்.
ஆனால், வழியில் செவ்விந்தியர்கள் தொந்தரவில்லாமல் பயணிக்க பாலைவனத்தின் ஊடே செல்வது தான் சிறந்தது என்று கூறி கடினமான பயணத்திற்கு அவர்களின் ஒப்புதலை நல்கி கொள்கிறார்.
பிரயாணத்திற்கு தேவையான தண்ணீர் மற்றும் குதிரைகள் ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பும் வேளையில், லாராவும் வாரனும் தங்களுக்குள் இந்த பயணம் தேவைதானா என்று வினவி கொள்கிறார்கள். வாரனின் கருத்த முகம் அவர்கள் ஏதோ உண்மையை ஷெரீப்பிடம் இருந்து மறைக்கிறார்கள் என்று பறை சாட்டுகிறது. ஆனாலும் லாராவின் வற்புறுத்தலின் பேரில், அந்த நால்வர் கூட்டணி பாலைவனத்தின் ஊடே தங்கள் நெடிய பயணத்தை தொடர்கிறது.
எதிர்பார்த்தபடி அந்த கடிய பயணத்தில் நால்வர் கூட்டணி தவித்து போய் விடுகிறார்கள். நடுவில் நிக்கின் ஏளன பேச்சு ஷெரீப்பை கடுப்பேற்றினாலும், தன் கடமையை நினைத்து அவர் பொறுமை காக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தண்ணீரும் தீர்ந்து போய் அவர்கள் வெயிலில் தவிக்கும் சூழல் உருவாகிறது.
Rani 002 p017Rani 002 p19அப்போது ஷெரீப் 15 மைல் தொலைவில் ஒரு ஊற்று இருப்பதாக கூற, ஆவலுடன் அதை தேடி, நடைபிணமாக தொடருகிறார்கள்.
பாதி உயிருடன் தட்டு தடுமாறி அந்த ஊற்றை அவர்கள் சென்றடையும் போது விதி அங்கு வறண்ட ஊற்றுகண்ணாக அவர்களை பார்த்து சிரிக்கிறது.
இக்கட்டத்தில் நமது பொறுப்பாசிரியரான திரு.ராமஜெயத்தின் மொழி பெயர்ப்பை பாருங்கள். வெயிலின் கொடுமையை கவிதை வரிகளின் பிரதிபலித்திருப்பார். போற்றபட வேண்டிய விஷயம்.
Rani 002 p022 நா வறண்டு கிடக்கும் நால்வரின் மத்தியில், இருந்த கொஞ்சம் நீரை பெண்ணான லாராவுக்கு தருவதாக முடிவு செய்ய, நிக்கின் திடீர் தடங்கலால், அந்த நீரும் தரையின் வெப்பத்தில் சிதறி பஸ்பமாக போய் விடுகிறது. தண்ணீர் தாகத்தில், மனநிலை பாதிக்கபடும் நிலைக்கு கூட நிக் சென்று விட அவனை சமாளிக்க அடித்து மயக்கத்தில் கொண்டு செல்கிறார் ஷெரீப்.
Rani 002 p024 நிலைமையை சமாளிக்க சற்று தொலைவில் இருக்கும் திரீ போர்க்ஸ் என்ற நகரத்தை அடைய யோசனை தெரிவிக்கும் ஷெரீப், நிமிர்ந்து பார்க்கையில் வாரனின் துப்பாக்கி தன்னை குறி வைப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
Rani 002 p34 சூதாட்ட பணத்தை தேட்டை போட்டதற்காக, வாரன் அந்நகரத்தில் தேடபடும் குற்றவாளி என்று தெரிவிக்கிறான். அதில் இருந்து தப்பவே அவர்கள் ஊரை விட்டு வேக வேகமாக வெளியேற முயல்வதையும் விளக்குகிறான்.
அவருக்கு உரிய நியாயத்தை வாங்கி தருவதாக கூறும் ஷெரீப்பை துப்பாக்கி முனையில் மிரட்டி சலினா பால்ஸுக்கே பிரயாணம் செய்ய வலியுறுத்துகிறான். கோபத்தில் அறிவு மங்கி விட்ட வாரனிடம் வாதம் செய்வதால் பயனில்லை, என்று உRani 002 p35ணர்ந்து கொள்ளும் ஷெரீப் அவன் சொல்படி பிராயணத்தை தொடர்கிறார்.
வழியில் எதிர்படும் செவ்விந்திய கும்பல் ஒன்றின் தாக்குதலை முறியடித்து, நகரத்தை ஒரு வழியாக அவர்கள் அடையும் நேரத்தில், நிக்கின் அண்ணன்கள் அனுப்பிய கைத்தடிகள் அவர்களை தாக்குகிறார்கள்.
அவர்களை எப்படி சமாளித்தார்கள்? சலீனா பால்ஸில் காத்திருக்கும் நிக்கின் அண்ணன்கள் என்ன திட்டம் வகுத்திருக்கிறார்கள்? தண்ணீரில்லாமல் துவண்டு போன கட்டத்திலும் தன் கணவனை காப்பாற்ற பிரய்யத்தனம் செய்யும் லாராவின் கதி என்ன? அவள் கனவன் காப்பாற்றபட்டானா?
இவர்களுக்கிடையே மாட்டி கொண்டு விழிக்கும் ஷெரீப்பின் நிலை என்ன? நிக்கிற்கு தண்டனை கிடைத்தா? என்ற பல கேள்விகளுக்கு விருவிருப்பாக விளக்கம் சொல்கிறது, இந்த 68 பக்கங்கள் கொன்ட ராணி காமிக்ஸின் இரண்டாம் இதழான கவ்பாய் காவியம்.
Rani 002 p054தண்ணீரின் முக்கியத்துவம், அதற்காக நடக்கும் போராட்டம் என்று நகரும் இந்த கதையில், வேவ்வேறு வாழ்க்கை முறையில் வளர்ந்த நபர்களின் ஊடே நடக்கும் உணர்ச்சி போராட்டம், நடுநடுவே துப்பாக்கி சண்டைகள் மிகவும் உயிரோட்டத்துடன் அமைந்து இருக்கும்.
மனிதனின் இன்றியமையாத தேவைகளிள் ஒன்றான தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஒருவன் மனநிலை கூட பாதிக்கபடுவான் என்ற உண்மையை உணர்த்தும் கட்டம் அபாரம். கூடவே தவறிழைத்த தன் கணவனை காப்பாற்ற முயலும் பெண்ணாக அறிமுகமாகும லாராவின் கதை சரியாக பின்னப்பட்டிருக்கிறது. கடைசி கட்டத்தில் சலினா பாக்ஸில் நடக்கும் துப்பாக்கி சண்டை திக் திக் ரகம்.
மொத்தத்தில் நான் படித்த முதல் கவ்பாய் கதைகளிள் ஒன்றானது என்பதால் இன்றும் நினைவில் தங்கும் ஒரு புத்தகமாக இது அமைந்திருக்கிறது. திரு. ராமஜெயத்தின் கவிதை வரிகளுடன் பயனித்த இந்த புத்தகம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது என்பதில் எந்த ஐயமுமில்லை. பிற்காலத்தில் வந்த அனைத்து கவ்பாய் கதைகளுக்கும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிய பெருமை இக்கதைக்கே சேரும்.
இந்த கதையின் இருந்த ஒரே குறை, அமெரிக்க மண்ணின் பூர்வ குடிமக்களான செவ்விந்தியர்களை ஏதோ காட்டுமிராண்டிகள் போல முறைபடுத்தி இருப்பது தான். ஆனால் பெரும்பான்மையான கவ்பாய் கதைகளின் சாராம்சமே அதுதான் என்று இருக்கும் போது, இதை மற்றும் குறை கூறுவானேன்?
Cowboy Picture Library 425இந்த கதையின் மூலம் இங்கிலாந்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த கவ்பாய் பிக்சர் லைப்ரரி (Cowboy Picture Library) என்ற தொகுப்பில் வெளியான ஒரு சித்திரக்கதை.
கிட்டதட்ட 500 புத்தகங்கள் வெளியான அந்த தொடரில் இது எந்த கதை என்று கண்டுபிடிப்பது கஷ்டம் என்றாலும், சற்று தேடுதலில் இந்த இரண்டாம் இதழின் அட்டைக்கான ஒரிஜினல் மாதிரி கிடைத்தது.
ராணி காமிக்ஸின் கண்கவர் அட்டைக்கான காரணம் இப்போது தெரிகிறதா?
அட்டையில் அது நமக்கு மிகவும் பரிச்சயமான கவ்பாய் வீரரான கிட் கார்ஸன் கதை என்று கூறியிருப்பதால், இந்த சித்திரகதை வேறு ஒரு புத்தகத்தின் மொழியாக்கமாக இருக்கலாம். அதை பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கின் காமிக்கியலில் இந்த பதிவின் ஆங்கில ஆக்கம் சில காலம் கழித்து வெளிவரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
பக்க நிரப்பிகளாக கடைசி பக்கங்களிள் வெளியானவை, சென்ற ராணி காமிக்ஸ் முதலாம் இதழை பற்றிய வாசகர் கடிதம், அக்காலத்தில் மிகவும் பிரபலமான வழி கண்டுபிடிக்கும் விளையாட்டு, மற்றும் குருக்கெழுத்து போட்டி.
அவற்றை இங்கே ரசியுங்கள்.
Rani 002 p65Rani 002 p66Rani 002 p67

கூடவே வழக்கம் போல அடுத்த இதழாக வெளிவர இருந்த இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் கதைக்கான விளம்பரம் உள்ளட்டையிலும், இரு விளம்பரங்கள் தாங்கி வெளிவந்த இன்னொரு உள்ளட்டை மற்றும் பின்னட்டையை கண்டு களியுங்கள். புத்தகத்தின் விலையை கட்டுக்குள் வைத்து கொள்ள விளம்பரங்களை உபயோகிப்பதற்கு நிகர் ராணி குழுமம் மட்டுமே, என்பதை மீண்டும் பறைசாற்றும்.

Rani 002 ic2Rani 002 ic1Rani 002 c2

பழைய நியாபகங்கள் துளிர்த்தெழுகிறதா? அந்த சந்தோஷ கட்டத்துடனும், ராணி காமிக்ஸின் 2ம் இதழை பற்றி உங்கள் அனுபவங்களையும், இந்த பதிவினை பற்றிய உங்கள் மேன்மையான விமர்சனத்தையும் படிக்கும் ஆவலுடன், இப்பதிவினை முடித்து விடைபெறுகிறேன்.

அடுத்த ராணி காமிக்ஸ் பதிவில் விரைவில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

47 பின்னூட்டங்கள்

#001: அழகியை தேடி - 01 ஜுலை 1984

காமிக்ஸ் அன்பர்கள் சமூகத்திற்கு வணக்கம். இரண்டு பாகமாக வெளிவந்த முன்னோட்ட பதிவுகளை (பகுதி 1 மற்றும் பகுதி 2), நீங்கள் ரசித்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த பகுதிகளில் பிண்ணூட்டம் இட்ட அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் என் நன்றிகள். அவைகளுக்கான என் பதிலை நீங்கள் அப்பதிவின் இறுதியில் காணலாம்.

முன்னோட்டத்தை தொடர்ந்து, வெகு நாட்களாக தயாராகும் விருந்து என்று அறிவிப்பில் மட்டுமே நிலைத்து கொண்டு இருந்த ராணி காமிக்ஸின் முதல் இதழை இந்த பதிவின் மூலம் நினைவு கூற போகிறோம்.

ஜூலை 01, 1984: ராணி காமிக்ஸ் தமிழ் காமிக்ஸ் உலகத்தில், தன்னுடைய முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய நாள்.

#1: அழகியை தேடிRani Comics #1 p00 007 ஜேம்ஸ் பாண்ட்

தங்கள் முதல் இதழ் முத்திரை பதிக்க வேண்டும் என்று எண்ணிய ராணி குழுமத்தினர், அதற்க்கு ஏற்ப உலக புகழ் பெற்ற துப்பறியும் நாயகன் 007 ஜேம்ஸ் பாண்டின் ஒரு முளூ நீள சாகசத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

லீலைகளுக்கு பெயர் போன ஜேம்ஸ் பாண்டின் முதல் சாகசத்திற்கு அவர்கள் பூடகமாக சூட்டிய பெயர் "அழகியை தேடி". நமது இந்திய கலைஞர்கள் கையில் உருவான வண்ணமிகு, வழு/வழு முன் அட்டையை பாருங்கள். இதழின் விலையான ரூ.1-50 அதற்கே சரியாக போகும், என்பது என்னுடய தாழ்மையான கருத்து.

ஆசிரியராக பொறுப்பேற்று கொண்ட திரு.ராமஜெயத்தின் இரு பக்க முன்னுரை, மற்றும் ஒரு முளு பக்க ஜேம்ஸ் பான்ட் படத்துடன், தொடங்கும் முதல் மூன்று பக்கங்களை கீழ் காணுக.
Rani Comics #1 p01 Rani Comics #1 p02 Rani Comics #1 p03

Rani Comics #1 p04இப்போது கதை களத்தை ஆராய்வோம். சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரை ஒட்டிய ஒரு பங்களாவில் ஒய்யார நடை போட்டு கொண்டு அறிமுகமாகிறார் ஜுலி என்ற ஒரு அழகி. அவரை அறியாமல் அவரை இரண்டு ஜோடி கண்கள் நோட்டம் இட்டு கொண்டு இருக்கின்றன. அதில் ஒருவர் நமது ஜேம்ஸ் பாண்ட்.

இது போதாது என்று அவருக்கு பக்கத்தில் இருப்பதும் ஜெசிகா என்ற ஒரு பெண் உளவாளி. Rani Comics #1 p05இவரை மட்டும் எப்படி அழகிகள் சூழ்ந்து கொள்கிறார்கள் என்று வாசகர்கள் எண்ணி கொண்டு இருக்கும் போதே, ஒரு நீட்டி மடக்கும்(?) உலோக கம்பியின் உதவியுடன் அட்டகாச சாகசம் செய்து மாளிகையிள் நுழைகிறார் பாண்ட்.

Rani Comics #1 p08 உள்ளே சுகமாக குழியல் போட்டு கொண்டு இருக்கும் ஜுலியை மிரட்டி ஆடைகளை களைந்து, அவர் காதலன் ரூபி குடுத்த நெக்லஸ் மட்டும் அணிந்து கொண்டு அவரை ஆர தழுவ கட்டளையிடுகிறார். இந்த கண்கொள்ளா காட்சியை(?!) அவரின் பெண் சகா யாரும் அறியாமல் தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்.Rani Comics #1 p09

ஏன் இப்படி ஒரு சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒரு காரியத்தை பாண்ட் செய்கிறார் என்று நாம் யோசித்து கொண்டு இருக்கும் வேளையில், ரூபி அங்கு வந்து சேருகிறார்.

Rani Comics #1 p11 ஆசையுடன் ஜுலியின் அறையில் நுழையும் ரூபியை தன் மயக்க குண்டின் மூலம் வீழ்த்துகிறார் பாண்ட். பின் இதே பிராயத்தை பயண்படுத்தி கட்டுமஸ்தான உடல் வாகு கொண்ட பார்னி என்ற குண்டு பெண்மணியை அவர் வீழ்த்த முயலும் போது, அவருக்கும் பார்னிக்கும் நடக்கும் சண்டை காட்சிகள் தத்ரூபம்.

பொதுவாக குண்டு ஆசாமிகளை சாதாராணமாக எடை போடும் நபர்களுக்கு இது ஒரு பாடம், என்பதை பாண்ட் உணர்ந்து கொள்ள நேருகிறது.

Rani Comics #1 p16Rani Comics #1 p17பார்ணியின் ஆக்ரோஷ தாக்குதலில் நிலை குழைந்தாலும், சமாளித்து அவரை வீழ்த்தி தன் ஹீரோ இமேஜை தக்க வைத்து கொள்கிறார்.

இந்த சண்டை காட்சி தத்ரூபமாக சொல்லபட்டுள்ள இந்த பக்கங்களை பாருங்கள்.

மாளிகையில் இருந்து தப்பிக்கும் நமது ஜோடி, மறைவிடம் வந்து சேருகிறது. பிறகு, ஜுலியிடம் தாங்கள் எடுத்த புகைபடங்களை காட்டி, ரூபிக்கு அவற்றை அனுப்பி வைக்க போவதாக மிரட்டுகிறார். ரூபி ஒரு நாள் முன்பு பரிசளித்த நெக்லஸை அவர் அணிய வற்புறுத்தியது, படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது என்று ரூபியை உணர வைக்கவே என்று புரிய வைக்கிறார்.

ரூபிக்கு இந்த விஷயங்கள் தெரிந்தால் தான் நிச்சயம் கொல்லபடுவோம் என்று உணரும் ஜுலி, பாண்ட் சொல்படி அவருடன் ஃப்ரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்திற்கு பயணமாகிறார்.

Rani Comics #1 p26ஆனால், ஜுலிக்கு தெரியமால் பாண்ட் ரூபிக்கு மர்ம தபால் மூலம் படங்களை அனுப்பி வைக்கிறார். ஜுலி தனக்கு துரோகம் இழைத்தாக கருதும் ரூபி, அவளை பழி வாங்க துடிக்கும் போது ஒரு அனாமதேய தொலைபேசி, ஜுலி மார்க் என்ற தன் காதலனுடன் பாரீசில் தங்கும் விலாசத்தை தகவலாக தருகிறது. ரூபி ஆட்கள் பாரீஸ் சென்றடைகிறார்கள்.

ஆனால், அவர்களே அறியாமல் Rani Comics #1 p27அவர்களை நோட்டம் இடும் ஒரு பெண்மணி பாண்டுக்கு இத்தகவலை தெரியபடுத்துகிறார். கொலையாளிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஜுலியை அங்கு அழைத்து செல்லும் பாண்ட், கொலையாளிகளிடம் இருந்து காப்பாற்றுவது போல நடித்து, அவரை கண் காணா இடத்துக்கு போய் பிழைத்து கொள்ள அறிவிருத்துகிறார். செலவுக்கு ரூபியிடம் இருந்து தான் கைப்பற்றிய வைர மோதிரங்களை குடுத்தனுப்பி வைக்கிறார்.

Rani Comics #1 p30இங்கிலாந்தில், பாண்டின் லன்டன் உளவு தலைமை நிலையத்தில், அவருடன் உறையாடும் அதிகாரி வில்லியம், ரூபி தங்கள் நாடகத்தில் ஏமாந்து விட்டதை பற்றி விவாதிக்கிறார்.

ரூபியிடம் இருந்து கையகபடுத்தி இருந்த சங்கேத தகவல்கள் மூலம் அவரின் ஆப்பிரிக்க ஏஜெண்ட் குர்த் பற்றிய விவரங்களை பாண்டுக்கு தெரியப்படுத்துகிறார் வில்லியம். கூடவே, இது சம்பந்தமாக நியூயார்க் வருகை தந்து இருக்கும் டமாரா என்ற நீக்ரோ மாடல் அழகியை சந்திக்கும் படி அறிவுறுத்துகிறார்.

Rani Comics #1 p31அமெரிக்க நகரமான நியூயார்க் சென்றடைகிறார் பாண்ட். அவருக்கு, அதிரடி பிரவேசத்தை பற்றி சொல்லியா கொடுக்க வேண்டும். அலங்கார போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கும் டமராவை, அவர் உடை மாற்றும் அறையிலேயே சந்திக்கிறார். அவரிடம் சிற்பியான அவர் தந்தை கார்வர் பற்றி விசாரிக்கும் பாண்ட், நீக்ரோ புரட்சியில் அவர் தந்தையை பகடை காயாக பயன்படுத்தப்படும் சாத்தியத்தை விளக்குகிறார்.

மேற்கொண்டு ரகசியமாக பேச அவர் அறைக்கே (?) அழைத்து செல்லுகிறார் டமாரா. பாண்ட் டமாராவிடம், ரூத் தலைமை ஏற்று நடத்தும் ரூபயத் என்ற அமைப்பை பற்றி விளக்குகிறார். அந்த அமைப்பு மேற்கு கிழக்கு நாடுகளிடைய குற்றவாளிகளை கடத்தும் காரியம் புரிவதாகவும், கார்வர் அவ்வடிபடையிலேயே குர்த் மூலம் அகாராவிற்கு கடத்தபட்டிருக்கலாம் என்று விவரிக்கிறார். இருவரும் ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டின், அகாரா நகரத்தை சென்றடைகின்றனர்.

Rani Comics #1 p40அகாராவில் குர்த் சதிவேலைகளுக்கு பயண்படுத்தும் ஓமர் டிரேடிங் கம்பெணியில், தங்கள் அகாரா ஏஜெண்ட் நூகுவாவுடன் பாண்ட் இரவில் துப்பு துலக்க நுழைகிறார். இக்கட்டத்தில், ஜன்னலோரம் இருக்கும் இடி மின்னல் தெய்வம் ஷாங்கோ சிலை, இவர்களை தாக்கும் காட்சி திகிலுட்டும் நிமிடங்கள்.

அதில் இருந்து தப்பும் நம் சாகச ஜோடி, தந்திகள் சிலவற்றை நுண்-படங்கள் எடுத்து கொண்டு திரும்புகிறது. அத்தகவல்கள் மூலம் ஆப்பிரிக்காவில் நீக்ரோ புரட்சி ஏற்படுத்த ரூபி மற்றும் குர்த் காரியமாற்றுவது விளங்குகிறது.

அடுத்த கட்டமாக, குர்த் மூலம் அனுப்பட்டது போல ஒரு பொய் தந்தியில், ஜுலியின் காதலன் மார்க் நீக்ரோ புரட்சிக்கு எதிராக சதி வேலை செய்வதாக, ரூபிக்கு அனுப்பி வைக்கிறார். அவர் எதிர்பார்த்தது போல, ஏற்கனவே ஜுலி மீது வெறியுடன் இருக்கும் ரூபி காணாவிற்கு புறபட்டு வருகிறார்.

Rani Comics #1 p48அதே போல் குர்திற்கு, காணாவிற்கு தான் மற்றும் சிற்பியின் மகள் டமாரா வர போவதாகவும், டமாராவை குர்த் சந்திக்க வேண்டும், என்று ரூபி மூலம் வருவது போல ஒரு பொய் தகவலை சேர்ப்பிக்கிறார் பாண்ட்.

அவர் எதிர்பார்த்தது போலவே, டமாராவை சந்திக்கும் குர்த், சதி வேலை பற்றி அறியாமல் அவளை அவள் தந்தை இருக்கும் மறைவிடத்திற்கு கூட்டி செல்கிறான். Rani Comics #1 p49 (சமயம் கிடைக்கும் போது எல்லாம் நேரத்தை வீணடிக்காமல் ஜேம்ஸ் “காரியமே” கண்ணாக இருப்பதை இங்கு கவனியுங்கள்).

யாரும் அறியாமல் அவர்களை பின் தொடரும் பாண்ட் மறைவிடத்தை அணுகுகிறார். Rani Comics #1 p52 இந்த கட்டத்தில் காவல் நாய்கள், மற்றும் காவலாளிகளுடன் அவர் மோதும் காட்சிகள் தத்ரூபமாக வரையபட்டிருக்கும்.

காவலாளிகளை சரி கட்டி விட்டு, கார்வரை சந்திக்கும் பாண்ட், அவரிடம் கரும் புயல் என்ற சதி வேலை பற்றி விவரிக்கிறார். ஆனால் கார்வரோ, அது தான் பக்கத்து ஆப்பிரிக்க நாடான பவுண்டா குடியரசுக்காக தயாரிக்கும் ஒரு சிலை தான் என்றும், அதற்காக மட்டும்தான் தன்னை பணியில் அமர்த்தி இருப்பதாக வாதிடுகிறார்.

Rani Comics #1 p57 உண்மையை அறிய சிலை வார்ப்பு தொழிற்சாலைக்கு அவர்களை அழைத்து செல்கிறார் கார்வர். அங்கு சிலைகளை ஆராயும் பாண்ட் அவைகளில் வெடிகுண்டு பொருத்தபட்டதை கண்டு பிடிக்கிறார். பவண்டா குடியரசு தலைவரை கொன்று, அதன் மூலம் கானா நாட்டின் மீது பழி விழ செய்வது.

அதன் தொடர்ச்சியாக வடக்கத்திய சதி என்று பிரகடனபடுத்தி, ஆப்பிரிக்காவில் ஒரு பெரும் போரை மூல செய்வதுதான் கரும் புயல் சதி என்று கண்டு பிடிக்கிறார்.

Rani Comics #1 p62இதற்கிடையே தான் சூழ்ச்சியில் வீழ்ந்து போனதை உணர்ந்து கொள்ளும் ரூபி தன் அடியாட்கள் சகிதம் வார்பு கூடாரத்தில் பாண்டை மடக்குகிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க மின் விளக்குகளை அணைக்கும் பாண்ட், வார்பட கூடத்தில் மறைந்து கொள்கிறார்.

உலையில் உமிழும் உலோக ஜுவாலை ஒளியில் அங்கு நடக்கும் சண்டை காட்சிகள் அபாரம். கருப்பு வெள்ளை சித்திரத்திலும் அதை திறம்பட கையாண்டிருப்பது, கதை சித்திர ஓவியரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கடைசியில் கபட நாடகம் ஆடி வீழ்த்த முயற்சிக்கும் ரூபியை அவர் உலைக்கலன் உலோக திரவத்தை கவிழ்த்து சாகடிக்கிறார். ரூபியின் கூட்டாளிகளும் சுற்றி வளைக்கபடுகிறார்கள்.

இவ்வழியே கரும் புயல் என்ற பெயரில் நடக்க விருந்த நீக்ரோ புரட்சியை வெற்றிகரமாக தடுத்து சாகஸம் புரிகிறார் ஜேம்ஸ் பாண்ட்.

Rani Comics #1 p64கடைசி காட்சிகளிள் டமாராவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் பாண்டிடம், டமாரா ஓட்டலுக்கு சென்று வெள்ளை - கருப்பு கலக்கும் கலாசார பரிவர்த்தனை (?) உபசாரத்தை பற்றி சங்கேத அழைப்பு விடுப்பதோடு, மொத்தம் 64 பக்கங்கள் கொண்ட இந்த ராணி காமிக்ஸின், மறக்க முடியாத ஜேம்ஸ் பாண்டின், கண்டம் விட்டு கண்டம் பாயும் (உண்மையிலேயே, ஒரே அர்த்தத்துடன் !!), முதல் சாகஸம் அமர்க்களமாக முடிவடைகிறது.

ஆனால், இந்த கதையில் பாண்டின் செய்கைகள் சற்று ஓவர் ரகமே. கழக கூட்டத்தை சிக்க வைக்க அவர் ஒன்றும் அறியாதே ஒரு பெண்ணை பகடை காயாக பயன்படுத்துவது, அவரை துன்புறுத்துவது போன்ற செயல்கள், பாண்டின் மீது வெறுப்பு வர செய்ய கூடியவை. வில்லியே ஆனாலும், பெண்ணாண பார்ணியை, அவர் சுவரில் அடித்து வீழ்த்துவது இன்னும் கொடூரம். எனக்கு தெரிந்து பாண்ட் இப்படிபட்ட ஒரு கதை கருவில், ஒரு வில்லனை போல பின் எப்போதும் தோன்றியதில்லை.

பிற்பாடு வெளியான பல பாண்ட் கதைகள் அவரின் இமேஜை காமிக்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலபடுத்தியது என்பதற்கு ஆதாரம், சென்ற பதிவில் இடம் பெற்ற ஓட்டெடுப்பில், அவர் வேதாளருடன் (மாயாவி) இன்றும் போட்டி போட்டு கொண்டு முன்னிலை வகிப்பதில் இருந்தே அறிய வருகிறது.

எனக்கு காமிக்ஸை அறிமுகம் செய்த என் அண்ணன், இந்த புத்தகத்தை அது வெளியான சமயத்தில் வாங்கவில்லை. அவர் 2 ம் இதழில் இருந்தே புத்தகங்கள் வாங்க ஆரம்பித்திருந்தார். (அல்லது, வாங்கிய புத்தகத்தை, என் கண்களுக்கு அவர் காட்டாமல் இருந்தும் இருக்கலாம்) அதற்கு காரணம், பிற்பாடு இந்த புத்தகத்தை நான் பழைய புத்தக கடைகளில் வாங்கிய பிறகே தெரிந்தது.

ராணி காமிக்ஸின் முதல் இதழான இதில் அப்பட்டமான நிர்வாண காட்சிகள் ஏராளம். அழகிய மங்கைகள் நேரம் கிடைக்கும் போது எல்லாம், ஆண்கள் சட்டை கழற்றுவதை போல மார்பு கச்சையை கழட்டி விட்டு நடமாடுவதை, தமிழக ரசிகர்கள் எவ்வகையில் ஒப்புக்கொள்வார்கள் என்று அறியாமல், ஓவியங்களை ஒரிஜினல் காட்சிகளுடனே திரு.ராமஜெயம் வெளியிட்டு இருந்தார்.

ஒரிஜினல் சித்திரங்களை சேதபடுத்த கூடாது என்ற எண்ணம் இந்திய அளவில் காமிக்ஸ் பதிப்பகத்தினரினிடம் ஒன்றும் புதியது இல்லை எண்றாலும், தமிழில் இப்படி பிரசுரவமாவது முதல் முறை என்பதால் திரு.ராமஜெயம் பல தரப்புகளில் குட்டு வாங்கி இருக்க கூடும். அதன் பிரதிபலிப்பு இதற்கு அடுத்து வந்த இதழ்களில் நடந்த சென்ஸார் மூலம் நாம் அறியலாம். ஆனாலும், பெற்றோர்கள் இந்த புத்தகத்தை எப்படி ஒதுக்கி இருந்தாலும், இளம் சிறார்களிடம் ராணி காமிக்ஸை பெரிய அளவில் பிரபலப்படுத்த ஒரு காரணியாக, இந்த முதல் இதழ் மாறி இருக்கலாம், என்று இப்போது நாம் நினைவு கூறலாம்.

பள்ளி சிறுவனான எனக்கு அந்த புத்தகத்தை வீட்டில் இருந்து மறைத்து பாதுகாப்பது பிரம்ம பிரயத்தன காரியமாக இருந்தது. இதை சாக்காக வைத்து கொண்டு, பால்ய காமிக்ஸ் நண்பன் ஒருவன், நான் எனது வீட்டாரிடம் மாட்டி கொள்வேன் என்று மிரட்டி, புத்தம் புதிதாக இருந்த இந்த புத்தகத்துக்கு பதிலாக ஒரு மொக்கை காமிக்ஸை பண்ட மாற்று முறையில் தலையில் கட்டி விட்டது இன்னொரு கதை.

இந்த தமிழ் கதை சித்திரத்தின் மூலம், 1975ல் இங்கிலாந்தின் டெய்லி எக்ஸ்பிரஸ் (Daily Express) நாளிதழில் சித்திர தெடர்கதையாக வெளி வந்த த ப்ளாக் ரூபி கேபர் (The Black Ruby Caper) ஆகும்.tbrc (c) mi6.co.uk இது, அப்பத்திரிக்கையில் பாண்ட் சித்திர தொடர் கதையின் 3 வது அத்தியாயம். பட கதை வரிசையின் படி 34 வது தொடர். கதாசிரியர் ஜிம் லாரண்ஸ் (Jim Lawrence), மற்றும் ஓவியர் யாரோஸ்லவ் ஹோரக்கின் (Yaroslav Horak) வெற்றி கூட்டணியில் உருவான சித்திரக்கதை.

இத்துடன் ராணி காமிக்ஸின் முதல் புத்தகத்தை பற்றிய இப்பதிவு முடிவுக்கு வருகிறது.

கதையுடன் பயணித்து விமர்சித்ததால் நீண்டு போன இப்பதிவில் கதாசிரியர்களை பற்றி இன்னும் பேசுவதை விட, அவர்களை பற்றி இப்பதிவின் ஆங்கில மொழியாக்கம், தாய் கழகமான காமிக்கியலில் சிறிது காலத்தில் வெளியாகும் போது, மேலும் பார்க்கலாம். மூல கதையின் ஒப்பீடும் அதில் அடங்கும்.

அடுத்த பதிவில் ராணி காமிக்ஸ் இரண்டாம் இதழை பற்றி அலசுவோம்.

Rani Comics #1 p65Rani Comics #1 p66ஆசிரியரின் கவிதை வரிகளுடன் முதல் இதழில் உட்பக்கத்தில் வெளியான அதன் விளம்பரத்தையும், பின் அட்டையில், அந்த காலத்தில் மிகவும் புகழ் பெற்ற சூதாட்ட பொழுதுபோக்கான லாட்டரி சீட்டுகள் விளம்பரத்தையும் அருகே காணுங்கள்.

லாட்டரி விளம்பரம் இல்லாமல், அடுத்த இதழ் அறிவிப்பு பின் அட்டையில் வெளி ஆகி இருந்தால், முதல் இதழ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், பணம் பண்ண நினைக்கும் யுக்தி அல்லவா அது, தினத் தந்தி குழுமத்தினர் அதில் கை தேர்ந்தவர்கள் என்றும் சொல்லத்தான் வேண்டுமா.

முடிவுரையாக, ராணி காமிக்ஸ் வலைபூவிற்கு தாங்கள் தரும் ஆதரவை கண்டு நான் மிகவும் மன மகிழ்கிறேன். இது வரை வெளியான பதிவுகள் அறிமுகம் மற்றும் முன்னோட்டம் தொனியிலேயே இருந்தாலும், வலைபூ தொடங்கிய குறுகிய கால கட்டத்தில், 1000’க்கும் அதிகமான வாசகர்கள் வலைபூவிற்கு வருகை தந்து இருப்பதே, அதற்க்கு சிறந்த சான்று. தாய் மொழியில் நமது அபிமான காமிக்ஸ் பற்றி படிக்க தங்களிடம் இருக்கும் ஆர்வம் அதில் வெளிப்படையாக தெரிகிறது.

தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்கிட வேண்டும் என்று கேட்டு கொண்டு, கூடவே வருகை தரும் அனைவரும் முடிந்த வரை தங்கள் கருத்துகளை இந்த பதிவை பற்றியும், ராணி காமிக்ஸ் முதல் இதழுடன் உங்கள் அனுபவத்தை பற்றியும், கண்டிப்பாக பதிந்து செல்லுமாறு பணிவுடன் வேண்டி கொள்கிறேன். இந்த வலைப்பூவின் நோக்கமே, அந்த இள பிராய கால கட்டத்தை நினைவு கூறுவது தானே. உங்கள் கருத்துகளை முடிந்த வரை தமிழில் பதிந்தால் இன்னும் சிறப்பு. அதற்கு வலப்பக்க காரணியை உபயோகபடுத்தலாம்.

இப்பதிவை படித்து கால இயந்திரத்தில் பின் நோக்கி பயணம் செய்தது போல நீங்கள் உணர்ந்தால், இந்த பதிவுக்கு உழைத்த நேரம் இனிதே கழிந்தது என்று நான் கருதுவேன். இப்பதிவுக்கான உங்கள் கருத்துகளை படிக்கும் ஆர்வத்துடன், மீண்டும் அடுத்த ராணி காமிக்ஸ் பதிவில் விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி.

45 பின்னூட்டங்கள்