முன்னோட்டம் - II

காமிக்ஸ் அன்பர் சமூகத்திற்கு வணக்கம்.  சென்ற பதிவில் ராணி காமிக்ஸ் காலகட்டத்தை வரையறுப்பது பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டோம், இப்போது அதை தொடருவோம்.  அனேகமாக கருத்து பகிர்ந்த ஏனயருடன்  என்னுடைய கருத்தும் ஒத்து போவதில் ஆச்சர்யம் இல்லை.

எனவே, என் மதிப்பில், அந்த மூன்று கால கட்டங்கள்:

  • பொற்க்காலம்: # 1 (ஆகஸ்ட் '84) - # 90 (மார்ச் '88)

திரு.ராமஜெயம் பொறுப்பில் வெளி வந்த முதல் 90 இதழ்கள்.  தரமான மொழிபெயர்ர்பு, சர்வதேச கதாநாயகர்கள், மட்டும் இல்லாமல் கவ்பாய் கதைகள், போர் காவியங்கள், விஞ்ஞான கதைகள், என்று வீர பவனி வந்த கால கட்டம்.  முத்து காமிக்ஸின் பாரம்பரியம், மற்றும் லயன் காமிக்ஸின் நவீனத்துவத்துக்கு, சரியான போட்டி கொடுத்த வருடங்கள்.

நான் தமிழ் படிக்க கற்று கொண்ட அந்த ஆரம்ப கால புத்தகங்கள் உட்பட, என்னுடைய வாரம் ஒரு ரூபாய் கை செலவு பணத்தில் என்னால் பெருமையுடன் புது புத்தக கடைகளிலேயே வாங்க முடிந்த இதழ்கள் அடங்கிய காலம்.

அந்த கால கட்டங்களில் லயன் மற்றும் முத்து காமிக்ஸின் 2,3 ரூபாய் விலைகள் அடங்கிய இதழ்கள், என்னை பொறுத்த வரை உயர் குடி மக்களுக்கு விதிக்க பட்டது என்ற எண்ணம் கூட இருந்தது :))

இக்காலத்தில் வெளி வந்த புகழ் பெற்ற கதாநாயகர்கள்
(அவர்கள் அறிமுகம் ஆன வரிசைக்கு ஏற்ப):

ஜேம்ஸ் பாண்ட்James BondJames Bond மூன்று குதிரை வீரர்கள்Three CowboysThree CowBoys கிட் கார்சன்Kit KarsonKit Karson டைகர்TigerTiger
சாகச வீரர் ஜானி மன்னர் பீமா இன்ஸ்பெக்டர் ஆசாத் புரட்சி பெண் ஷீலா
Johnny HazardJohnny Hazard BeemaKing Beema Inspector  AazaadInspector Aazaad SheelaAxa
ப்ரூஸ் லீ பில்லி ராயன்
Bruce LeeBruce Lee BillyBilly Buck RyanBuck Ryan

அனைவரும் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்றாலும், மிகவும் பிடிக்கும் என்ற வகையில், என் மனம் கவர்ந்த நாயகர்கள்:

  • ஜேம்ஸ் பாண்ட் (சந்தேகமே இல்லாமல்),
  • டைகர் (டொட்ட-டாங்  என்று அவர் கூறும் பாங்கே அலாதி),
  • மூன்று குதிரை வீரர்கள் (ஒற்றை கண் நபர், ஆரம்ப இதழில், வானத்தில் நட்சத்திரம் பார்த்து twinkle,twinkle பாட்டு படிக்கும் கட்டம், இன்றும் நினைவில் தங்கும் விஷயம்)

  • வசந்தக்காலம்: # 91 (ஏப்ரல் '84) - # 288 (ஜூன் '96)

சந்தேகமே இல்லாமல் திரு.அ.மா.சாமி என்ற "ஆமா சாமி" பொறுப்பற்ற கால கட்டம்.  ராமஜெயம் விட்டு சென்ற நல்ல அடித்தளத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல், அவர் மனம் போன போக்கில் கதை கருக்களை கொன்று, கொத்து கரி போட்ட சமயம்.  ஆனாலும், ஜேம்ஸ் பாண்டு போன்ற கதாபாத்திரத்தின் துணையுடன், ராமஜெயம் காலத்தில் அறிமுகமான மற்ற கதாபாத்திரங்களின் மீதம் உள்ளம் கதைகளோடு,  இன்னும் பல உலக புகழ் பெற்ற கதாநாயகர்களை அறிமுக படுத்தியதால், இதை வசந்த காலம் என்று கொள்ளலாம். 

இதன் கால கட்டம் எது வரை என்பதில் கட்டாயம் காமிக்ஸ் ஆர்வலர்களிடையே வெவ்வேறு கருத்துக்கள் எழலாம்.  ஆனால் என்னை பொறுத்த வரை, ஐரோப்பா கதைகள் மட்டும் இல்லாமல், ஏற்கனேவே இந்திரஜால் காமிக்ஸ் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகி இருந்த அமெரிக்கா கதாபாத்திரங்களை (King Features Syndicate) துணைக்கு அழைத்து கொள்ளப்பட்ட இதழ் 288 வரையிலான ராணி காமிக்ஸ், இவ்வட்டத்துக்குள் சரியாக பொருந்தும்.

ஏற்கனவே வெளியான கதாநாயகர்களுடன், இக்காலத்தில் வெளி வந்த புகழ் பெற்ற கதாநாயகர்கள்:

தில்லான் பக் ஜோன்ஸ் சிஸ்கோ கிட் மாடஸ்டி பிளைசி மாயாவி
Thillon Thillon Buck Jones Buck Jones Cisko Kid Cisco Kid Modesty Modesty Blaise Phantom Phantom
ஃபிளாஷ் கார்டன் ரிப் கிர்பி மான்டிரேக் முரட்டு காளை கார்த்
Flash Gordon Flash Gordon Rip Kirby Rip Kirby Mandrake Mandrake Garth Garth

இவர்களில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றி சொல்லவும் வேண்டுமா,  எல்லோரையும் போல:

  • மாடஸ்டி பிளைசி (அழகு, வீரம், மெல்லிய நட்பு கலந்த பெண்ணோவியம்)
  • மாயாவி (நம்மை கானகங்களுக்கே கொண்டு செல்லும் கதை பாங்கு)
  • மான்டிரேக் (அவர் மாளிகையை அடைய கடக்கும் முஸ்தீபுகள் போதாதா?)

  • இருண்டக்காலம்: # 289 (ஜூலை '96) - # 500 (ஏப்ரல் '05)

ராணி காமிக்ஸ் என்ற சகாப்தத்திற்கு சாவு மணி அடிக்க தொடங்கிய கால கட்டம்.  அதற்க்கு முத்தாய்ப்பு  வைப்பது போல, "கரும் புலி" என்ற கதாநாயகர் அறிமுகம் ஆனது 289 வது இதழில் தான்.  இவருக்கு போட்டியாக வடக்கில் வெளியான இன்னும் பல மொக்கை கதாபாத்திரங்களை தேடி பிடித்து தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களை திரு.அ.மா.சாமி வெறுப்பேற்றி ஓட வைத்த தருணம்.

போதா குறைக்கு, வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்த 1990 க்கு முந்தய ராணி காமிக்ஸ்களை திரும்பவும் மறுபதிப்பு என்ற பெயரில் தரம் குறைத்து வெளியிட்ட கால கட்டம்.  கடைசி நேரத்தில், வண்ண மயமாக இதே கதைகளை மூன்றாம் பதிப்பு வேறு பதித்து, பொறுமையை மிகவும் சோதித்த காலமும் இதுவே.  ராணி காமிக்ஸின் தரம் குறைய காரண கர்த்தாவான திரு.அ.மா.சாமி, அதை புதைகுழியில் தள்ளும் 500 வது இதழ் வரை பொறுப்பேற்று இருந்தது ஒரு கரிய உண்மை.

இக்காலத்தில் வெளி வந்த "புகழ் (?!!!)" பெற்ற கதாநாயகர்கள்:

கரும்புலி ஜடாயு இந்திய  டார்ஜான் டைசன் அக்னிபுத்ரா
KarumpuliKarum Puli JadaayuJadaayu TysonTyson Agniputra Agniputra

தயவு செய்து, இதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்னவென்று கேட்டு வெருபேற்றாதீர்கள், நண்பர்களே :)


எதை பதிப்பது - எதை விடுவது என்று தெரியாமல் திரு.அ.மா.சாமி, ஒரு கட்டத்தில் உலக புகழ் பெற்ற தோர்கள், மற்றும் ஹீ-மேன் கதாபாத்திரங்களை கூட ஒரு சில இதழ்களில் தோன்றி மறைய வைத்தார்.  வண்ணமிகு இதழ் என்று கூறி கொண்டு கடைசி கட்டங்களில் வெளி வந்த குப்பை ராணி காமிக்ஸ்களில் தீட்டப்பட்ட வண்ணம், நமது வீட்டு சிறுவர்கள் வரையும் ஓவியத்தை விட கேவலமாக (?!!!) வெளியானது, ராணி குழுமத்தினர், ராணி காமிக்ஸ் மேல் கொண்டு இருந்த "காதலை" பறை சாற்றும்.

தரத்தில் மட்டும் அல்ல, புத்தக வடிவைமப்பில் கூட பிரதிபலித்தது அந்த "காதல்".  வள வள அட்டை போய் "ராணி முத்து" தரத்தில் ஒரு பேப்பர் அட்டை.  புத்தக அளவு குறைந்து ரெடிமேட் கைக்குட்டைக்கு ஈடாக மாறியது. இப்படி கூறி கொண்டே போகலாம்.  ஆனால் குறைகள் மட்டுமே வாழ்கை அல்லவே.

காமிக்ஸ் ஆர்வலர்கள், ராணி காமிக்ஸின் அந்திம காலத்துக்கு முந்தய நேர்த்தி குறைந்த வெளியீடுகளை வெறுத்து ஒதுங்கினாலும், தொடர்ந்து 21 ஆண்டுகள் தங்கு தடையில்லாமல் மாதம் இருமுறை, நாள் தவறாமல் வெளிவந்த ஒரே தமிழ் காமிக்ஸ் என்ற பெருமை ராணி காமிக்ஸ் மட்டுமே சொந்தமாகும். 

மாதம் 1, மற்றும் 15 என்று புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தாலும், ஒரு நாள் முன்னேயே தவறாமல் கடைகளில் கிடைத்த ஒரே இதழ்.  என் அண்ணனுக்கும் எனக்கும் காலையில் யார் முதலில் எழுந்து கடைக்கு சென்று புத்தகம் வாங்கி முதலில் படிப்பது என்றே ஒரு போட்டி கூட இருந்தது.  எப்பவும் போல தூங்கு மூஞ்சி ஆனா எனக்கு அது சாத்திய படவில்லை.

ராணி காமிக்ஸ் தனது பயணத்தை முடித்து கொண்ட போது வருத்தம் ஏற்பட்டாலும், உள்ளுக்குள் இனிமேலும் அதன் சகாப்தத்தின் கொலையை பார்க்க மாடோம் என்ற நிம்மதி கட்டாயம் இருந்தது. 

கடைசி கால கட்டங்களில் ராணி காமிக்ஸ் வாங்குவதையே நிறுத்தி வைத்து இருந்த நான், 500 வது இதழை நெருங்கி கொண்டு இருந்த சமயத்தில் வெறும் சேகரிப்புக்கு மட்டும் வாங்குவதற்காக, நண்பர் ஒருவரின் அறிவுரைக்கு ஏற்ப, 2 வருட சந்தா கூட கட்டினேன். சந்தா ஆரம்பித்த இரண்டே மாதங்களில் ராணி காமிக்ஸ் "சுபம்" போட்டு விட, அந்த சந்தா பணமும் "ஸ்வாகா" ஆனது ஒரு தனி கதை.

எது எப்படியோ, ராணி காமிக்ஸ் இன்றும் சில வாசகர்களிடையே பசுமையான சில நினைவுகளை விட்டு சென்று இருப்பது உண்மையே.  இந்த வலைபூ மூலம் அந்த எண்ணங்களை நினைவு கூறுவதே முதற் நோக்கம்.  முதல் 90 இதழ்கள் வெளி வந்த காலம் பொற்க்காலம் என்பதால், இன்னும் பல வலை பதிவுகளுக்கு நமக்கு குறை கூறும் எண்ணம் இருக்க போவது இல்லை.  அதற்க்கு பிறகு வரும் சோக கட்டத்தை மறந்து, இந்த சுகமான எண்ணங்களிடையே சஞ்சரிக்க, நீண்டு போன முன்னோட்டத்துக்கு  இத்துடன் முற்றுபுள்ளி வைத்து விட்டு,  புத்தாண்டு முதல் ஆரம்பிப்போம்.

அதற்க்கு முன் உங்கள் மனம் கவர்ந்த கதாநயகர்கள் இவற்றில் யார், ஏன் என்று ஏன் நீங்கள் பதிய கூடாது?  வோட்டும் போடலாமே.

சிரமம் கொண்டு பதிவுகள் பதிந்தாலும், ஏனோ தங்கள் கருத்துக்களை அந்த அந்த பதிவுகளில் பதிவதில், வருகை தரும் பெரும்பாலானோரிடம் ஒரு வித தயக்கம் உள்ளது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே.  இந்த பழக்கத்தை ஒழித்து, மற்றவர்களையும் ஆர்வத்துடன் பங்கெடுக்க வைக்க என்ன மாற்றங்கள் மற்றும் புதுமைகள் செய்யலாம், என்றும் உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ளவும் ஆசை.  கண்டிப்பாக இது சம்பந்தமான உங்கள் என்னோட்டங்களையும் பதியுங்கள்.

கூடவே, இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை படிக்கும் ஆர்வத்துடன், இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

பி.கு.:

1. இந்த பதிப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து சித்திரங்களும், நமது ராணி காமிக்ஸ் பதிப்புகளின் வெவ்வேறு கால இதழ்களில் இருந்து, பிரதி எடுத்து, மேம்படுத்தி உபயகோபடுதப்பட்டுள்ளது.

2. நண்பர் சிவ், சென்ற பதிவின் பின்னூட்டத்தில், அன்றைய கால இந்திரஜால் காமிக்ஸ் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை பற்றி பதியாததை சுட்டி காட்டி இருந்தார். உண்மை தான், கிட்ட தட்ட 1980 ல் இருந்து 1989 வரை தமிழில் மொழியாக்கம் செய்து அவர்கள் வெளியிட்ட இதழ்கள், ஒரு காமிக்ஸ் பொக்கிஷம். 

ஆனால் அதன் மொழிபெயர்ப்பு ஏனோ என்னிடம் மற்ற தமிழ் காமிக்ஸ்கள் போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதே உண்மை. தமிழர்கள் முழுமையாக பங்கெடுக்காத ஒரு இதழ் என்பது அதற்க்கு ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். ஆனாலும், முழு வண்ணத்தில், வித்தியாசமான புகழ் பெற்ற கதாநாயகர்களை, தொடர்ந்து வெளியிட்ட இதழ் என்ற ஒரு தனிசிறப்பான மகுடம் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.

blog comments powered by Disqus