சுய புராணம்

அன்பிற்கினிய தமிழ் வாசகர்களுக்கு, என் முதற்கண் smileவணக்கம்.  கடந்த 2 வருடங்களாக "காமிக்கியல்" என்ற பெயரில் காமிக்ஸ் உலகத்தை பற்றிய ஒரு வலைபதிவேடை நான் நடத்தி வந்ததாலும், தமிழில் முழுக்க முழுக்க ஒரு வலைபதிவேடை ஆரம்பிப்பது எனக்கு ஒரு புது முயற்சியே.  வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறப்பதை என்னால் உணர முடிகிறது.

2005'ல் நான் வலைப்பதிவேடு ஆரம்பித்த போது, எனக்கு இருந்த உந்து சக்தி,
முத்து விசிறியின் வலைப்பக்கம் தான். அப்போது தான், தமிழில் பல வலைபூ நடத்தி, பிறகு அதை செப்பனிடுவதில் ஏற்படும் வேலை பளுவை காரணம் காட்டி அவர் பிளாக்கரை தஞ்சம் அடைந்து இருந்தார்.

அவருக்கு அந்த யோசனைக்கு மூலம், பல காமிக்ஸ் ப்ளாக்குகளுக்கு ஒரு முன்னுதாரனமான திகழ்ந்த (திகழும்) த காமிக் ப்ராஜக்ட் என்ற அன்பர் தான். அந்த அனாமதேய நண்பரும், ஒரு தமிழர் என்பது துணை செய்தி. 

TamilNet அந்த சமயத்தில், உண்மையிலேயே தமிழில் வலைபூ நடத்துவதற்கு இருந்த வசதிகள் மிகவும் குறைவே.  எண்ணற்ற தமிழ் எழுத்து வடிவங்கள், முறையில்லாத விசைபலகைகள்.  பள்ளி பருவத்தில் தமிழ் தட்டச்சு பயின்ற போது, கணினியில் ஒரு கலைபனியே நடத்தலாம் என்று இருந்த நான், அதற்க்கு பிறகு கணினிக்கு என்று தனி விசைபலகை உருவான போது அடைந்த ஏமாற்றத்துக்கு அளவே இல்லை.

எனவே, முத்து விசிறியின் அனுபவத்தை பாடமாக கொண்டு, நானும் ஆங்கிலத்தை அடிபடையாக கொண்டு, எனது முதல் வலைப்பூவை ஆரம்பித்தேன். அதுவும் நல்ல முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமீப காலமாக ஒரு புதிய உத்வேகத்தை தமிழ் Chennai Blog Campவலைபதிவேடுகளில் காண முடிகிறது. எண்ணற்ற நண்பர்கள் தங்கு தடையில்லாமல் நமது தாய் மொழியில் அளவாடுவதும், தங்குளுக்குள் ஒரு கூட்டணி அமைத்து, சந்திப்புகளில் அவர்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை பறிமாறிகொள்வதும் என்று களைகட்டுகிறார்கள். இவற்றை பார்த்து நாமும் ஏன் பங்கெடுக்க கூடாது என்று ஆசை அவ்வபோது தோன்றிது நியாயமே, என்றாலும் ஒரு வலைபூ நடத்தவே தாவு தீருகிறது, இதில் இன்னொன்றா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

ஆனால் பங்கு வேட்டையர் ஜோஸ் மற்றும் காமிக்ஸ் டாக்டர் சதீஷ் தங்கள் காமிக்ஸ் அனுபவங்களை தமிழில் பதிய ஆரம்பித்தவுடன், நாமும் களத்தில் குதிப்பதற்கு இதுவே  சரியான நேரம் என்று தோன்றியது.  அதன் விளைவே இந்த வலைபூ.

சரி முடிவெடுத்து விட்டோம், ஆனால் எதை மையமாக கொண்டு எழுத ஆரம்பிப்பது என்று ஒரு சங்கோஜம். 

  • பழைய முத்து காமிக்ஸ் பற்றியோ, லயன் காமிக்ஸ் பற்றியோ நான் பேசுவது அவ்வளவு சரியாக இருக்காது, அந்த பெருமை நெடு நாள் வாசகர் ஆன முத்து விசிறி’க்கு  மட்டுமே உகந்ததாகும்.
  • மற்ற தமிழ் காமிக்ஸ்’க்களை பற்றி விஸ்வா அவர் வலையேட்டில் சிறப்பாக பதிந்து வருகிறார். 
  • வாண்டுமாமா, பூந்தளிர், ரத்னபாலா, அம்புலிமாமா போன்ற சிறுவர் இலக்கியங்களை அய்யம்பாளையம் வெங்கடேஷ்வரன் தனது புதிய வலைபூவுக்கு குத்தகை எடுத்து விட்டார்.

விட்டு போனது ராணி காமிக்ஸ் மட்டுமேஉண்மையை சொல்வதென்றால் நான் சிறு வயதில் அதிகம் படித்தது ராணி காமிக்ஸ்.  சரியாக 500 புத்தங்கங்களை தங்கு தடையில்லாமல் வெளியிட்ட ஒரு நிறுவனம்.   ஒரு வகையில் நான் தமிழ் படிக்க கற்று கொண்டதே  ராணி காமிக்ஸின் முதல் 5 இதழ்களை படித்து தான்.  முத்துவும், லயன் காமிக்சும் அறிமுகம் ஆனது அதற்கு பிற்பாடே.

ஆகவே, இந்த வலைப்பதிவை சாக்காக வைத்து கொண்டு அந்த பழைய புத்தங்களை மறுபடியும் படிக்க ஒரு காரணம் கிடைக்கும் போது அதை விடுவானேன். 

என்னப்பா இன்னும் ஒரு வலை பதிவேடா? இந்த ஆளுக்கு வேற வேலை வெட்டி கிடையாதா என சில கூக்குரல்கள் எழும் என்று அறியேன்.  ஒரே சமயத்தில் இரண்டு வலை பதிவேடுகளை பேணி காப்பது எவ்வளவு கஷ்டமான ஒன்று என்பதை நானும் அறிவேன். அதுவும் நம்முடைய வேலை பளுவுக்கு நடுவே அது ஒரு இயலாத காரியம்.  ஆரம்பத்தில் காமிக்கியல் ஆரம்பித்த போது எனது எண்ணம், அதை ஒரு கூட்டு முயற்சியாக மாற்றுவது தான். ஆனால் அப்போது அதற்கு சரியான வழி வகை அமையவில்லை. கடைசியில் "நானே ராஜா, நானே மந்திரி" என்ற முறையில் அதை நடத்த வேண்டியதாகி ஆகி விட்டது.

ஆனால் இம்முறை, இது ஒரு கூட்டு தாக்கு. முதலில் கூட்டு சேர்ந்து உள்ளவர், நமது "வேதாள உலக" எழுத்தர், மற்றும் 'பங்கு வேட்டையர்'  ஜோஸ்.  ஏனைய நமது சக பதிவர்களுக்கும் அழைப்பு அனுப்ப உத்தேசம்.  இவ்வழியே ஒருவர் மாற்றி ஒருவர், அவர் அவர் வசதிகேற்ப, நேரம் தவறாமல், பதிவிட இயலும். 

இக்கூட்டணி, 'லாரன்ஸ் & டேவிட்' போன்ற அதிரடி கூட்டியா, அல்ல 'மாண்டிரெக் & லூதர்' போல மந்திர கூட்டணியா, அல்ல 'கவுண்டமணி & செந்தில்' போல காமெடி கூட்டணியா (?!!!) என்பது நீங்கள் போடும் பின்னூட்டங்கள் மூலம் மட்டுமே அறிய முடியும்.  அதனால், வருகை தரும் அனைவரும் உங்கள் கருத்தை பதிந்து விட்டு செல்லுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

இந்த பதிவு மிகவும் நீண்டு கொண்டே செல்வதால், என் மொக்கையை இத்துடன் முடித்து கொண்டு, ராணி காமிக்ஸின் முதல் இதழை, விமர்சிப்பதற்கு முன், ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு சிறு அறிமுக பதிவோடு அடுத்து சந்திக்கிறேன்.  தொடரும் பதிவில்,  பங்கு வேட்டையர் அவர் பாணியில் புகுந்து விளையாடுவார்.

பி.கு.: முதன் முதலில் என்னை தமிழில் பதிய அழைப்பு அனுப்பிய சக பதிவர், மற்றும் தற்போதைய எழுத்தாளர், 'லக்கி லுக்'கிற்கும், விடாமல் என்னை தமிழில் எழுத அறைகூவல் விட்டு கொண்டே இருந்த நண்பர் 'ஜோஸ்'சுக்கும் என் நன்றிகள்.

blog comments powered by Disqus