முன்னோட்டம் - I

காமிக்ஸ் நண்பர்களே, வணக்கம். சுய புராணம் முடிந்தது, அடுத்தது ராணி காமிக்ஸ் பற்றிய மலரும் நினைவுகளில் திளைக்கும் முன்பாக, தமிழ் காமிக்ஸ் வரலாற்றை சற்று புரட்டி பார்த்தால், ராணி காமிக்ஸ் அதற்கு அளித்த பங்களிப்பை உணர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. எனவே இந்த முன்னோட்டம்.

முத்து #1 (1972)தமிழ் காமிக்ஸ்களின் மூலம், 1972 முதல் வெளி வர தொடங்கிய முத்து காமிக்ஸ் என்று சொன்னால் மிகையாகாது. (அட்டை பட உபயம்: முத்துவிசிறி) 

"முத்து பைன் ஆர்ட்ஸ்" என்ற பெயரில் (இன்றைய பிரகாஷ் பதிபகத்தினர்), திரு.முல்லை தங்கராசனை பொறுப்பாசிரியராக கொண்டு,  வெளி வந்த முத்து காமிக்ஸ்.

அதற்க்கு முன்பு வரை பத்திரிக்கை அல்ல வார-மாத இதழ்களில் பக்க நிரப்பிகலாகவும்-ஒட்டு சுருள்கலாகவும் உபயகொப்படுத்தப்பட்டு கொண்டு இருந்த சித்திரகதைகளுக்கு, ஒரு தமிழ் காமிக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிவகையை முதலில் அறிமுகப்படுத்தியது. அதற்க்கு அவர்களுக்கு உதவியது  இங்கிலாந்தை சேர்ந்த  ஃபிலீட்வே  (Fleetway)  பதிப்பகம். 

இன்று நம் மக்களுக்கு அறிமுகம் ஆகி உள்ள அமெரிக்கன் சூப்பர் ஹீரோ காமிக்ஸை விட, கதாபாத்திர சித்தரிப்பு மற்றும் கதை களத்தில் சிறந்து விளங்கிய ஐரோப்பா காமிக்ஸ்கள், தமிழக வாசிப்பாளர்களிடம் பிரபலம் அடைந்ததில் ஆச்சர்யம் இல்லை.  அந்த கால கட்டத்தில் முத்து காமிக்ஸ் மேல் இருந்த ஒரே குறை, சீராக அதன் பதிப்புகள் வெளியிட முடியாத இயலாமையே.  அந்த குறை தீர 12 வருடங்கள் எடுத்து கொண்டது.

1984 தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் பொன் எழுத்துகளில் பதிக்க பட வேண்டிய ஒரு வருடம்.  இந்த வருடத்தில் தான் மூன்று புதிய தமிழ் சித்திரகதை புத்தகங்கள் தங்கள் பயணத்தை ஒரே நேரத்தில் தொடங்கின (ஜூலை ‘84).

Lion Comics Logo

முதலாமாவது, முத்து காமிக்ஸ் பதிப்பகத்தினரின் இன்னுமொரு படைப்பு - லயன் காமிக்ஸ், திரு.S.விஜயனை பொறுப்பாசிரியராக கொண்டு, தெற்காசியாவின் பட்டாசு தலைநகரமான சிவகாசியில் இருந்து.

Mehta Comics Logo

இரண்டாவது, அவர்களுக்கு போட்டியாக அவர்கள் ஊரில் இருந்தே வெளிவந்த மேத்தா காமிக்ஸ், (இச்சமயத்தில் கட்சி தாவி இருந்த) திரு.முல்லை தங்கராசனை பொறுப்பாசிரியராக கொண்டு.

Rani Comics Logo

மூன்றாவது, பிரபலமான தின-தந்தி பதிபகத்தினரின் அரவணைப்பில் உருவான நமது வலைபூ கதாநாயகர் -
ராணி காமிக்ஸ், தமிழக தலைநகர் சென்னையிலிருந்து.  இதற்க்கு பொறுப்பாசிரியராக நியமிக்க பட்டவர் திரு.S.ராமஜெயம்.

வித்தியாசமான கதாநாயகர்கள், கதை தரம், புத்தக அமைப்பு, வள-வள அட்டை படங்கள், கண்ணை பறிக்கும் ஓவிய அச்சு, தரமான மொழிபெயர்ர்ப்பு, என்று  முதல் முறையாக ஒரு மும்முனை போட்டியை தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் பார்க்க நேர்ந்தது.  இந்த போட்டியில் மேத்தா காமிக்ஸ் ஆரம்ப வருடங்களிலேயே கடை மூடி விட, ராணி காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் இடையே ஒரு நேருக்கு-நேர் போட்டி உதயமானது.  இடைப்பட்ட காலத்தில், சில முறை திடீர் திடீர் என்று உதயமாவதும் மறைவதுமாக மேத்தா காமிக்ஸ் கண்ணாம்பூச்சி ஆடி கொண்டு இருந்தது.

ஆரம்பத்திலேயே லயன் காமிக்ஸை முந்தி கொண்டு, புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்டு (James Bond 007) கதைகளை தன் வசம் செய்த ராணி காமிக்ஸ், முத்து மற்றும் லயனின் பாரம்பரிய ஃபிலீட்வே பதிப்பகத்திலும் கை வைத்து, குதிரை வீரர்கள் (Cow-Boy), மற்றும் துப்பறியும் சாகசங்களையும் அதன் இதழ்களில் வெற்றி நடை போட வைத்தது.  

இந்த ஆரம்ப கட்ட போட்டியில், ராணி காமிக்ஸ் முன்னிலை படுத்தப்பட்டதற்கு முதற்-முதல் காரணம், தின-தந்தி என்ற பெரிய குழுமத்தின், அசைக்க முடியாத முகவர் வட்டம் (விற்பனை பிரதிநிதிகள்).  நகரங்கள் முதற் கொண்டு, பட்டி-தொட்டி, பெட்டி கடை எங்கும் தங்கள் காமிக்ஸ்களை சரளகமாக விற்பனை செய்ய அது உதவியது.

இன்னொரு காரணம், அதன் விலை.  லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் தனது அமைப்பு, மற்றும் கதை நீளத்தின் அடிப்படையில் அதன் விலையை அவ்வப்போது மாற்றி கொண்டு இருந்த போது, அதே அளவு மற்றும் பக்கங்கள் கொண்டு, ரூ.1.50 என்ற விலையில் கிட்ட தட்ட 4 வருடம்  சீராக வெளியிட்ட ராணி காமிக்ஸ், சாமானிய வாசகனுக்கு சென்று அடைவதில் சிக்கல் ஏற்பட வில்லை.  அதற்கு பிறகும் கூட ரூ.2 விலையை 10 வருடங்கள் தொடர்ந்த சாதனையும் அவர்களுக்கே உரித்தாகும்.  சீரான விலையுடன், அதே தரத்தில் வெளி வந்த ராணி காமிக்ஸ், ஒரு வழியாக வெகு ஜன வாசகர்களின் பிரியமான இதழனாது, நான் உட்பட.  அதன் விளைவே இந்த வலைபூ.

ராணி காமிக்ஸ் எவ்வளவு தான் சாதனைகள் செய்தாலும், கடைசியில் இன்று விஞ்சி நிற்பது முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் மட்டுமே (அதற்க்கு காரணம் பின்-புலத்தில் திரு.சவுந்தரபாண்டியன், மற்றும் திரு.விஜயன் அவர்களின், அசையாத காமிக்ஸ் மேல் கொண்ட காதல்).  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, கால போக்கில், கதை தேர்வு, மற்றும் மோசாமான மொழிபெயர்ப்பில் ராணி காமிக்ஸ் உழன்று, வாசகர்கள் மனதில் இருந்து அறவே ஒழிந்து போனது.

இதன் அடிப்படையில் ராணி காமிக்ஸ் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது, அதை மூன்று கால கட்டங்களில் வரையறுக்கலாம்:

  • பொற்க்காலம்
  • வசந்தக்காலம்
  • இருண்டக்காலம்
இந்த கால கட்டங்கள் ராணி காமிக்ஸ்க்கு எவ்வகையில் பொருந்தும் என நான் ஒரு எண்ணம் வகுத்து இருக்கிறேன்.  அதை பற்றி அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.  என்னடா, ஏதோ மெகா சீரியல் போல இழுவையா - என்று எண்ண வேண்டாம்.  காமிக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தாலே, நேரம் போவது தெரியாது (குறைந்த பட்சம், என்னை பொறுத்த வரை).  அது எழுத்து வடிவத்திலும் தொடர்ந்த காரணத்தால், முன்னோட்டம் நீண்டு போயிற்று.  வேறு வழியில்லாமல், இரண்டு பதிவாக போட வேண்டிய நிலைமை.  எனவே முன்னுரை நிறைவு பதிவு, சில நாட்களில் வெளியிடப்படும்.

அதற்க்கு முன், இந்த முன்னோட்ட பாகத்தை பற்றியும், உங்கள் எண்ணங்களில் ராணி காமிக்ஸ் கால கட்டம் எவ்வகைபடும் என்றும், நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்களை பதிய கூடாது?

உங்கள் கருத்துக்களை படிக்கும் ஆர்வத்துடன், இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

பி.கு.: என்னுடைய முந்தய பதிவை வந்து பார்த்து தங்களது கருத்துக்களை பதிந்த அனைவருக்கும் நன்றி.  நாள் தோறும் வருகை தரும் எண்ணற்ற அன்பர்களிடம், அடுத்த பதிவு போட ஏற்பட்ட கால தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.  கூட்டணி என்றாலே பிரச்சனை தான், அரசியலிலும் சரி, பதிவுலகத்திலும் சரி. 

கூட்டு வலைப்பதிவு என்று கூறி விட்டு நான் மட்டுமே வண்டி ஓட்ட கூடாது என்ற எண்ணத்தில், ஏனைய வலைப்பூ தமிழ் காமிக்ஸ் அன்பர்களை அழைத்து, ஒரு மித்த கருத்து கொண்டு வரவே இக்கால தாமதம். அதற்க்கு இன்னும் நேரம் கூடவில்லை. அது வரை இரட்டை மாட்டு வண்டி தான் கதி, எனவே தாமதம் ஏற்படின் மன்னிக்கவும்.

blog comments powered by Disqus